ஆக்சிஜன், தடுப்பூசிகளை தமிழகத்திலேயே உற்பத்தி: முதல்வர் உத்தரவு

சென்னை: ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக அரசு சார்பில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கு வகையில், நிரந்தரத் தீர்வாக தமிழகத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களை துவக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுமட்டுமின்றி, மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள் மற்றும் கொரோனா தொடர்பான மருந்துகள் உற்பத்தியை தமிழகத்திலேயே உருவாக்குவதற்கும், தொழில் கூட்டு முயற்சிகளை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

தொழில் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), மேற்காணும் அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவையும், உதவிகளையும் அளிக்கும். மேலும், குறைந்தபட்சம் ரூ.50 கோடி முதலீடு செய்யும் நிறுவனங்களுடன், டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் ஆலைகளை நிறுவுவதற்கு விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து விருப்பக் கருத்துகளை மே 31ம் தேதிக்குள் கோரியுள்ளது. பெறப்படும் விருப்பக் கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் உற்பத்தி உட்கட்டமைப்புகளை விரைவில் நிறுவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

(Visited 35 times, 1 visits today)

About The Author

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *