1,212 செவிலியர்கள் பணி நிரந்தரம்

சென்னை: அரசு மருத்துவமனைகளில், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வந்த, 1,212 செவிலியர்கள், பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர்.

 

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் சார்பில், 2015, 2019ம் ஆண்டுகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் தொகுப்பூதிய அடிப்படையில், அரசு மருத்துவமனைகளில் நியமிக்கப்பட்டனர்.

பணி நிரந்தரம் உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 2017ல், சென்னை டி.எம்.எஸ்., வளாகத்தில், மூன்று நாட்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு வழங்கப்பட்ட ஊதியம், 7,500 ரூபாயில் இருந்து, 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது.

முதல் கட்டமாக, 2,000க்கும் மேற்பட்ட செவிலியர்கள், பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். தற்போது, 1,212 செவிலியர்களை, பணி நிரந்தரம் செய்ய, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை இயக்குனர் குருநாதன் உத்தரவிட்டுள்ளார். அவர்கள் அனைவரும், ஒப்பந்த செவிலியர் பணியிலிருந்து இன்று விடுவிக்கப்படுவர். ஒதுக்கப்படும் இடத்தில் வரும், 10ம் தேதிக்குள், பணியில் சேர வேண்டும் என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

சென்னையில், கொரோனா பரவல் அதிகம் இருப்பதால், பணி நிரந்தரம் செய்யப்பட்ட செவிலியர்கள், சென்னை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற உள்ளனர். அதன்பின், அவர்கள் தங்கள் மாவட்டங்களுக்கு செல்வர். தொகுப்பூதியமாக, 15 ஆயிரம் ரூபாய் பெற்று வந்த செவிலியர்கள், பணி நிரந்தரம் செய்யப்பட்டதால், 40 ஆயிரம் வரை ஊதியம் பெறுவர்.

முதல்வராக பதவியேற்கும் முன், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் சுகாதார துறையினரை உற்சாகப்படுத்தும் நிலையில், ஸ்டாலின் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதேபோல, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும், 200க்கும் மேற்பட்ட ஆண் செவிலியர்களையும், தொகுப்பூதியத்தில் உள்ள மற்ற செவிலியர்களையும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Source: Dinamalar

(Visited 57 times, 1 visits today)

About The Author

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *